கூடுதல் பங்குகளை அதானி குழுமம் திரும்பப் பெற்றதால், இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் பங்குச்சந்தையில் வரலாறு காணாத மோசடி செய்து பல்லாயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக ஹிண்டன்பேர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்ற நிலையில் 20 ஆயிரம் கோடி நிதி திரட்ட அதானி குழுமம் தனது கூடுதல் பங்குகளை பொது வெளியில் விற்பனைக்கு கொண்டு வந்தது.
இந்த பங்குகளை முழுமையாக வாங்கி முதலீடு செய்ய பல அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முன்வந்த போதிலும், கூடுதல் பங்குகளை திரும்பப் பெறுவதாக அதானி அறிவித்துள்ளமை பங்குச்சந்தையில் இந்திய நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை பிரதிபலிப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
எனவே, அதானியின் கூடுதல் பங்குகள் திரும்பப் பெறப்பட்டதால், இந்திய பொருளாதாரத்தின் செயல்பாட்டிற்கோ, அதன் மதிப்புக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பங்குச் சந்தையை சிறந்த நிலையில் வைத்திருக்கும் அதிகாரம் செபியிடம் உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.